search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக அரசு"

    • தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • தமிழகத்திற்கு கேட்டதை விட மிக குறைந்த அளவு தண்ணீரை திறந்து விட உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை கண்டித்தும் கோஷமிட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இந்தக் கூட்டம் தொடங்கும் முன்னர் , காவிரி நீர் பிரச்னை தொடர்பாக மத்திய, கர்நாடக அரசுகளைக் கண்டித்து விவசாய சங்க நிர்வாகிகள் என்.வி. கண்ணன், செந்தில்குமார், ஜீவகுமார் உள்பட ஏராளமான விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரி நீர் பிரச்னை தொடர்பாக மத்திய, கர்நாடக அரசுகளைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தரை நீக்கக் கோரியும், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட வலியுறுத்தியும், கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற கோரியும் , தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர். மேலும் தமிழகத்திற்கு கேட்டதை விட மிக குறைந்த அளவு தண்ணீரை திறந்து விட உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை கண்டித்தும் கோஷமிட்டனர்.

    இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இதேபோல, விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கமன மாநிலத் துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் விவசாயிகள், குறுவை பயிரைக் காப்பாற்ற காவிரி நீர் கோரி பானைகளை காவடியாகத் தூக்கி வந்து கலெக்டரிடம் மனு அளித்து முறையிட்டனர்.

    இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவிரி ஆற்றின் மையப்பகுதியில் அங்கு உள்ள மணல் திட்டில் உடலை புதைத்துக்கொண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கி, அதன்பின்னர் மீத்தேன் மற்றும் எரிவாயு எடுக்கும் நோக்கிலேயே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

    திருச்சி:

    தமிழக அரசு உடனடியாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்தும் இதற்கு மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், காவிரியில் தமிழகத்திற்கான உரிய தண்ணீரை பெற்றுத் தர தமிழக அரசை வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், மாநில துணைத்தலைவர் மேக ராஜன் முன்னிலையில் விவசாயிகள் 11-வது நாளாக இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று டெல்டா பகுதிகளில் கருகும் பயிர்களை காப்பாற்றுவதற்காக காவிரியில் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு கர்நாடகாவிடம் மற்றும் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீரை பெற்று தர வேண்டும்.

    விவசாயிகளையும் விவசாயத்தையும் காக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி காவிரி ஆற்றின் மையப்பகுதியில் அங்கு உள்ள மணல் திட்டில் உடலை புதைத்துக்கொண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசாரும், தீயணைப்பு படையினரும் ஆற்று நீரில் கயிறு கட்டி இறங்கி, போராட்டம் நடந்த மணல் திட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தனர்.

    இதுகுறித்து அய்யாகண்ணு கூறும்போது, காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கி, அதன்பின்னர் மீத்தேன் மற்றும் எரிவாயு எடுக்கும் நோக்கிலேயே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதனை உடனடியாக மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். உதவி ஆணையர்கள் அன்பு, நிவேதா லட்சுமி ஆகியோர் நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை செய்திருந்தனர்.

    • மேகதாது அணை திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதியில் 29 வனத்துறை அதிகாரிகளை ஆய்வு பணிக்காக நியமனம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • வானிலை அனுமதித்தால் 60 நாட்களுக்குள் கணக்கெடுப்பை முடிக்க முடியும்.

    பெங்களூரு:

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கில் அணை கட்டினால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு போராடி வருகிறது.

    இந்த விவகாரத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் தற்போது வரை கிடைக்காததால் தற்போது மாற்று வழியை கண்டறிய கர்நாடக அரசு தயாராகி வருகிறது. அணை தொடர்பான திட்ட அறிக்கையில் ஏராளமான மரங்கள் வெட்டப்படும் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

    அதை சரி செய்ய ஏதுவாக மேகதாது அணை திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதியில் 29 வனத்துறை அதிகாரிகளை ஆய்வு பணிக்காக நியமனம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது. இவர்கள் நில அளவீடு பணிகளை தொடங்கி உள்ளனர். கர்நாடகா-தமிழ்நாடு காடுகளுக்கு இடையேயான எல்லையை குறிக்க ஒவ்வொரு 20 மீட்டருக்கும் மர கட்டைகளை வைத்துள்ளனர்.

    மழை, காற்று, வெள்ளம் போன்றவற்றால் மரக்கட்டைகள் பழுதடைந்து குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் கான்கிரீட் தூண்கள் அமைக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் ஒருங்கிணைந்த நீர்ப்பாசன அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு வனத்துறை முதன்மை வன பாதுகாவலரின் ஒப்புதலை பெற வேண்டும் என வனத்துறையினர் கூறினர்.

    இதை தொடர்ந்து மேகதாது திட்டத்தில் நீரில் மூழ்கும் பகுதிகள் மற்றும் அழியும் மரங்கள் மற்றும் தாவரங்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு உதவும் வகையில் அளவுகள் அமைத்து வருகின்றனர்.

    இதுபற்றி கர்நாடக வனத்துறை அதிகாரி மாலதி பிரியா கூறுகையில், நில அளவீடு பணிக்காக பந்திப்பூர் புலிகள் காப்பகம், சாம்ராஜ்நகர், பிலிகிரி ரங்கநாதசுவாமி வனவிலங்கு சரணாலயம், எம்.எம். ஹில்ஸ் சரணாலயம், காவிரி வனவிலங்கு சரணாலயம் ஆகிய பகுதிகளில் இருந்து அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். வானிலை அனுமதித்தால் 60 நாட்களுக்குள் கணக்கெடுப்பை முடிக்க முடியும் என்றார்.

    மேகதாது அணை திட்டத்திற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஜெயலலிதா மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக ஆட்சி செய்தார்.
    • வருகின்ற பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தான் தி.மு.க.வின் நிலை என்ன என்பது தெரிய வரும்.

    பவானி:

    ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக சசிகலா நேற்று ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

    பவானி அந்தியூர்-மேட்டூர் பிரிவு ரோட்டில் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சசிகலா பிரச்சார வேனில் அமர்ந்தபடி பேசினார்.

    எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற கட்சியை தொடங்கி ஆட்சி அமைத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். அதில் குறிப்பிடத்தக்கதாக சத்துணவு திட்டமாகும். அதன் பின்னர் ஜெயலலிதா மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக ஆட்சி செய்தார்.

    2 ஆண்டுகளை கடந்த தி.மு.க. அரசு மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தி விட்டு வருகிறது. மகளிருக்கு பஸ்சில் பயணம் செய்யும் போது இலவசம் எனக்கூறி விட்டு அதில் பயணிக்கும் உங்களை பார்த்து ஓசியில் பயணம் செய்கிறீர்களே என ஒரு அமைச்சர் பேசுகிறார்.

    அதே போல் தேர்தல் வாக்குறுதியின் போது பெண்களுக்கு உரிமை தொகை ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்து விட்டு தற்போது அந்த திட்டத்தில் பல்வேறு தடைகள் போடப்பட்டு உள்ளது.

    மின்சார கட்டணம் உயர்வு காரணமாக தற்போது ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்து வரும் நிலையில் வெளிநாட்டில் இருந்து முதலீட்டாளர்களை கொண்டு வந்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குகிறார்கள் என்பது எத்தனை சாத்தியம் என்பதை பொது மக்கள் நீங்கள் தான் நினைத்து பார்க்க வேண்டும்.

    அதேபோல் வேளாண்மை துறைக்காக முதன் முதலில் தனியாக பட்ஜெட் போட்ட தி.மு.க. அரசு இன்று தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது.

    வேளாண்மை துறை முன்கூட்டியே தயார் நிலையில் இதற்கான ஆலோசனை செய்திருந்தால் தக்காளி, வெங்காயம் விலையை கட்டுப்படுத்தி இருக்கலாம்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தான் தி.மு.க.வின் நிலை என்ன என்பது தெரிய வரும். அதுவரை தமிழக மக்களை தி.மு.க.வினரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.

    தற்போது தமிழ்நாட்டில் வருவாய்த்துறையினர் மூலம் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளர். அதேபோல் சாலை வரி 5 சதவீதம் உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளதால் பொது மக்கள் மேலும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 200 டி.எம்சி. தண்ணீரை பெற்று தர தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நமக்கு கடந்த ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் கொடுத்திருக்க வேண்டும்.
    • மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை சென்று உள்ளது.

    சென்னை:

    நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மாலை டெல்லி செல்ல உள்ள நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நீரை திறந்துவிடவில்லை. ஆகையால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் அவர்களுக்கு வலியுறுத்த சொல்ல, டெல்லி செல்கிறேன்.

    காவிரி நீரை ஒவ்வொரு மாதம் எவ்வளவு வழங்க வேண்டுமோ அதனை கர்நாடகம் வழங்க வேண்டும் என அம்மாநில அரசை கேட்டுக் கொள்கிறேன். பருவமழை குறைவால் தண்ணீர் வழங்க முடியாது என கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியது பற்றி கேட்கிறீர்கள். தண்ணீர் கொடுக்க முடியாத காரணத்தை அவர்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீர் வேண்டும் என்று நமது காரணத்தை தெரிவிக்கிறோம்.

    நமக்கு கடந்த ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் 2.833 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கியது. 6.357 டி.எம்.சி தண்ணீர் நமக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா தடுப்பணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசுடன் கர்நாடகா அரசு பேசினால் வரவேற்போம். ஏன் அங்கு அணைகட்டக் கூடாது என்பதை காரணத்தோடு விளக்கம் கொடுப்போம்.

    மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை சென்று உள்ளது. ஆனால் அது தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு குறித்து கேட்டபோது, அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்க மறுத்து ஆள விடுங்க... என்று பேட்டியை முடித்துக் கொண்டார்.

    • கூடுதலாக அரிசி கொள்முதல் செய்ய முடியாத நிலை இருப்பதால் பணமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.
    • அரிசிக்கான தொகையானது ஜூலை 1ம் தேதி முதல் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பின்னர் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றத் தொடங்கி உள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு (பிபிஎல் கார்டுதாரர்கள்) மாதந்தோறும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் 5 கிலோ இலவச அரிசி ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. மீதம் வழங்க வேண்டிய 5 கிலோ இலவச அரிசிக்குப் பதிலாக பணமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கூடுதலாக அரிசி கொள்முதல் செய்ய முடியாத நிலை இருப்பதால் 5 கிலோ இலவச அரிசிக்குப் பதில் பணமாக வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கிலோவுக்கு 34 ரூபாய் வீதம், 170 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த தொகையானது ஜூலை 1ம் தேதி முதல் வழங்கப்படும்.

    இது தற்காலிக ஏற்பாடு மற்றும் அரிசி கொள்முதல் செய்யும்வரை மாற்று வழி என்று சட்டம் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.

    • சேவா சிந்து செல்போன் செயலி மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
    • பெங்களூரு ஒன், கிராம ஒன் உள்ளிட்ட மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

    பெங்களூரு

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து வீடுகளுக்கு 200 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்திருந்தார். இந்த 200 யூனிட் இலவச மின்சாரத்தை பெறுவதற்கு சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. மேலும் வாடகை வீடுகளில் வசிப்பவருக்கும், புதிதாக வீடு கட்டுபவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு கடந்த 15-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் பெற தகுதியானவர்கள் சேவா சிந்து செல்போன் செயலி மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் பெங்களூரு ஒன், கிராம ஒன் உள்ளிட்ட மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் தங்களது மின் கட்டண தகவல் விபரம் மற்றும் வாடகை வீட்டில் இருப்பதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

    • புதிய நிபந்தனையால் பெங்களூரு மாநிலம் முழுவதும் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
    • கூடுதலாக பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டும் கட்டணத்தை செலுத்தினால் போதுமானது.

    பெங்களூரு:

    கர்நாடக அரசு, இலவச மின்சார திட்டத்திற்கான அரசாணையை பிறப்பித்துள்ளது. இதில் விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனையால் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு திட்ட சலுகை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக அரசு சமீபத்தில், அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் மாதம் தலா 200 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படும் என்றும், இந்த திட்டம் ஜூலை 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுவதாகவும் அறிவித்தது. வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் இலவச மின்சார திட்டம் பொருந்தும் என்று துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறினார். ஆனால் தற்போது ஒருவரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால், அதில் ஒரு இணைப்புக்கு மட்டுமே இலவச மின்சார திட்டம் பொருந்தும் என்று அரசு கூறியுள்ளது.

    இந்த புதிய நிபந்தனையால் பெங்களூரு மாநிலம் முழுவதும் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாடகை வீட்டில் வசிப்போர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த திட்டத்திற்கான அரசாரணையை மாநில அரசு பிறப்பித்துள்ளது.

    அதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:-

    கர்நாடகத்தில் வீடுகளுக்கு மாதம் தலா 200 யூனிட் வரை இலவச மின்சார திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் வணிக நோக்கங்களுக்கு மின்சாரம் பயன்படுத்துவோருக்கு பொருந்தாது. மாதந்தோறும் மீட்டர் அளவிடும்போது, மொத்த மின் பயன்பாட்டிற்கு கட்டணத்தை கணக்கிட வேண்டும்.

    ரசீதில் தகுதியான மின் பயன்பாட்டிற்கான தொகையை கழித்துவிட்டு அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டும் கட்டணத்தை கணக்கிட்டு மின் நுகர்வோருக்கு வழங்க வேண்டும்.

    கூடுதலாக பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டும் கட்டணத்தை செலுத்தினால் போதுமானது. சேவா சிந்து இணையதளம் அனுமதிக்கப்பட்ட மின் அளவை விட நுகர்வோர் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தி இருந்தால், அத்தகையோருக்கு பூஜ்ஜியம் என்று குறிப்பிட்ட ரசீது வழங்க வேண்டும்.

    இந்த திட்டத்தின் கீழ் பயனை பெற விரும்புகிறவர்கள் சேவா சிந்து இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மின் நுகர்வோர் தங்களின் மின் நுகர்வோர் அடையாள எண், கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள பாக்கிய ஜோதி, குடீர ஜோதி, அம்ருத் ஜோதி திட்ட மின் இணைப்புகள் இந்த திட்டத்துடன் இணைக்க வேண்டும்.

    மின் கட்டண பாக்கியை வருகிற 3 மாதத்திற்குள் செலுத்த வேண்டும். அதற்குள் பாக்கியை செலுத்த தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின் நுகர்வோர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால், அவற்றில் ஒரு இணைப்பு மட்டுமே இந்த திட்டத்தின் பயனை பெற முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு அமைச்சர்கள் கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
    • வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவே அணை கட்டப்படுகிறது என டிகே சிவக்குமார் பேச்சு

    கர்நாடக அரசு மேகதாது என்னுமிடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகம் தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில், தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிப்படி மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சியை தொடங்கி உள்ளது.

    தற்போதைய துணை முதல்வரான டி.கே.சிவகுமார், நீர்வளத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். நீர்வளத்துறை அதிகாரிகளுடனான முதல் ஆலோசனைக் கூட்டத்திலேயே, மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவித்தார். இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அமைச்சர்கள் கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாட்டின் இந்த எதிர்ப்பு தொடர்பாக டி.கே.சிவக்குமார் கூறுகையில், மேகதாது அணை கட்டும் விஷயத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.

    'தண்ணீருக்காக நாங்கள் பாதயாத்திரை மேற்கொண்டோம். வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவே அணை கட்டப்படுகிறது. தமிழ்நாடு இந்த விவகாரத்தை சகோதரத்துவத்துடன் அணுக வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. அணையால் தமிழகத்திற்கு அதிக பயன் உள்ளது. உரிய நேரத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பங்கீடு நீர் கிடைக்கும்' என்று டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார்.

    ஆனால் தமிழகம் தரப்பில் இந்த விளக்கத்தை ஏற்க தயாராக இல்லை. அணை கட்டும் முயற்சியை தடுப்பதில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் உள்ளன. இந்த விஷயத்தில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு மோதலுக்கு தயாராகிவிட்டது. இதன் காரணமாக மேகதாது அணை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதையும் எடுத்துக் கூறியுள்ளேன்.
    • மேகதாது விவகாரத்தில் நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகாவின் முந்தைய அரசு, மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுத்தபோது, எனது தலைமையிலான அம்மாவின் அரசு சட்ட ரீதியாகவும், மத்திய அரசோடும் பேச்சுவார்த்தை நடத்தி அணை கட்டுவதை தடுத்து நிறுத்தியது.

    மேலும், நான் முதலமைச்சராக இருந்த போதும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதும், பாரதப் பிரதமர் அவர்களை நேரில் சந்திக்கும்போதெல்லாம் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்ததோடு, அவ்வாறு அணை கட்டினால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதையும் எடுத்துக் கூறியுள்ளேன்.

    பன்மாநில நதிநீர் தாவாச் சட்டம் 1956-ன்படி, நதிநீரை தடுப்பதற்கோ அல்லது திசை திருப்புவதற்கோ எந்த மாநிலத்திற்கும் உரிமை கிடையாது என்று தெள்ளத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காவிரி நடுவர் மன்றம் அதன் இறுதி ஆணையில், எந்த ஒரு திட்டத்தினையும் செயல்படுத்தும் முன்னரே, கீழ்ப்பாசன மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

    மேகதாது விவகாரத்தில் இந்த நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை. மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் முயற்சியை கடுமையாகக் கண்டிப்பதோடு, தமிழகம் வறண்ட பாலைவனமாக மாறாமல் தடுக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்று கர்நாடக மாநில அரசை எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • கர்நாடக முதன்மை மாநகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் நரசிம்ம மூர்த்தி மேல்முறையீடு செய்தார்.
    • கர்நாடகா அரசு தரப்பில் வழக்கறிஞர் நியமிக்கப்பட்டதால், விரைவில் ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம்விட வாய்ப்பு உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.

    பெங்களூர்:

    சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் கர்நாடகாவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

    கடந்த 27 ஆண்டுகளாக கர்நாடகா கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் 27 வகை பொருள்களை மட்டும் ஏலம்விட்டு அதில் வரும் தொகையை கொண்டு சொத்துக்குவிப்பு வழக்கிற்கு செலவிடப்பட்ட நிதியை வசூல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து கர்நாடக முதன்மை மாநகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் நரசிம்ம மூர்த்தி மேல்முறையீடு செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமச்சந்திரா, சிறப்பு வழக்கறிஞரை நியமித்து ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களையும் ஏலம் விட்டு நடவடிக்கை எடுக்கும்படி கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டார். அதன்படி, ஜெயலலிதாவின் வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள், தங்க நகைகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள், 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த புடவைகள், 44 குளிர்சாதன இயந்திரங்கள், 91 கைக்கடிகாரங்கள், 27 சுவர் கடிகாரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கார சேர்கள், 81 தொங்கு விளக்குகள், 20 சோபா செட்கள், 250 சால்வைகள், 12 குளிர்பதன பெட்டிகள், 10 தொலைக்காட்சி பெட்டிகள், 8 சிவிஆர் கருவிகள், 140 வீடியோ கேசட்டுகள் ஆகியவை ஏலத்தில் விற்கப்பட இருக்கின்றன.

    இதனிடையே தீர்ப்பு வழங்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் சொத்துகளை ஏலம்விட வழக்கறிஞர் நியமிக்கப்படாததால் கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்ற சமூக ஆர்வலர் மீண்டும் மனுத் தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இதுபற்றி விரைவில் விசாரிக்க உள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட சிறப்பு வழக்கறிஞராக கிரண் எஸ்.ஜாவலியை நியமித்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் இவர் மேற்கொள்வார் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா அரசு தரப்பில் வழக்கறிஞர் நியமிக்கப்பட்டதால், விரைவில் ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம்விட வாய்ப்பு உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.

    • வாடகை தொகையை தேர்தல் செலவு நிதியில் இருந்து மட்டுமே ஒதுக்க வேண்டும்.
    • தனியார் பஸ்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.43.50 ஆகவும், ஒரு நாளைக்கு ரூ.8,700 ஆகவும் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசு மற்றும் தனியார் பஸ்கள் தேர்தல் பணிக்கு வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்படும். இதையொட்டி அந்த பஸ்களுக்கான வாடகையை நிர்ணயித்து அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    கா்நாடகத்தில் அரசு பஸ்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.57.50 ஆகவும், ஒரு நாள் வாடகை குறைந்தபட்சம் ரூ.11 ஆயிரத்து 500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச தொகையை முன்பணமாக செலுத்த வேண்டும். ஒரு நாள் என்பது 24 மணி நேரங்களை உள்ளடக்கியது. அதற்கு மேல் 2 மணி நேரம் ஆனால், அதை முழு நாளாக கருத வேண்டும். இந்த வாடகை தொகையை தேர்தல் செலவு நிதியில் இருந்து மட்டுமே ஒதுக்க வேண்டும்.

    பெங்களூர் நகருக்குள் பயன்படுத்தப்படும் தனியார் பஸ்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.43.50 ஆகவும், ஒரு நாளைக்கு ரூ.8,700 ஆகவும் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடகைக்கு முடிவு செய்து, அதை பயன்படுத்தாமல் இருந்தால் அதற்கு வாடகையாக ரூ.4,350 செலுத்த வேண்டும். பெங்களூரு நகருக்கு வெளியே பயன்படுத்தப்படும் தனியார் பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.42.50 ஆகவும், ஒரு நாள் வாடகையாக ரூ.8,200 ஆகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறியரக சரக்கு வாகனங்களுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.29 ஆகவும், ஒரு நாள் வாடகையாக ரூ.2,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ×